போக்குவரத்து குற்றங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், நீண்ட தூர சேவை பயணிகள் பஸ்களுக்கு விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படும் என பதில் பொலிஸ்மா அதிபர் அனைத்து உயர் மற்றும் பிராந்திய பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இரவு நேரங்களில் நடைபெறும் இப்பரிசோதனையின் போது, மது அருந்தி வாகனம் ஓட்டுதல், போதைப்பொருள் தாக்கத்தில் வாகனம் செலுத்துதல், மற்றும் கவனயீனமாக, ஆபத்தான முறையில் வாகனம் செலுத்துதல் போன்ற குற்றங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, முக்கிய வீதிகளில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் அதிகாரிகள் குழுக்கள் நியமிக்கப்பட்டு, இரவு நேரங்களில் செல்லும் பஸ்கள் மற்றும் வாகனங்களை பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மோட்டார் சைக்கிள் ரோந்து பொலிஸாரின் உதவியுடன், வழிமறித்து பஸ்களை சோதனைக்கு உட்படுத்தி சட்டங்களை உறுதியாக அமல்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளார்.