பொலன்னறுவை ஶ்ரீபுர பகுதியில் நடைபெற்ற மோசடி உர விற்பனை தொடர்பில் 12 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு குழுவினர் ரூ.5,500க்கு விற்பனை செய்யவேண்டிய 21% நைட்ரஜன் கலந்த உர மூட்டைகளில், போலி லேபல்கள் ஒட்டி 46% நைட்ரஜன் கலவையென குறிப்பிடப்பட்ட உரங்களை தயாரித்து, ரூ.13,650க்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தகவல் அடிப்படையில் நடத்திய சுற்றிவளைப்பில், மோசடி உரங்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலையிலிருந்து 1,565 உர மூட்டைகள் மற்றும் போலி லேபல் பொருத்தப்பட்ட 13,500 பைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதையடுத்து, களஞ்சியசாலை முகாமையாளர் உட்பட 12 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி தப்பிச் சென்றுள்ளார். மேலும், உர களஞ்சியசாலைக்கு அருகிலுள்ள இரண்டு வீட்டு நிலங்களில் மறைத்து வைக்கப்பட்ட உரிமையாளரின் மூன்று வாகனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மோசடி தொடர்பாக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.