(அபூ உமர்)
அட்டாளைச்சேனைப் பகுதியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் (ACMC) மீது பொதுமக்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளதாக, அக்கட்சியின் பிரதி செயலாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்ஸில் தெரிவித்துள்ளார்.
அட்டாளைச்சேனையில் அண்மையில் நடைபெற்ற, உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், “இந்தத் தேர்தலில் எமது கட்சி கடந்த முறை காட்டிலும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இரண்டு வட்டாரங்களில் வெற்றி பெற்றதுடன், இரண்டு பட்டியல் ஆசனங்களும் பெற்றுள்ளோம். இது, மக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்துகிறது” எனக் கூறினார்.
மேலும், “முன்னைய தேர்தலில் ஒரு வட்டாரம் மற்றும் இரண்டு பட்டியல் ஆசனங்கள் மட்டுமே கிடைத்திருந்தன. இம்முறை வாக்குகள் சுமார் 50% அதிகரித்துள்ளன. இது ACMC தலைமையின் தன்னம்பிக்கை மற்றும் தகுதியான வேட்பாளர்களை மக்கள் ஏற்றுக் கொண்டதின் விளைவாகும்” எனவும், “நேர்மையும் மக்கள் நலனும் முதன்மை கருதும் எமது சமூகப் பயணம் தொடர்ந்து எதிர்காலத்திலும் வலுப்பெறும்” என்றும் சட்டத்தரணி அன்ஸில் வலியுறுத்தினார்.