வடக்கு மக்கள் பயன்படுத்தி வந்த காணிகளை அரசுடமையாக்கும் வகையில் வெளியிடப்பட்ட வர்த்தமானி உடனடியாக மீளப்பெறப்பட வேண்டுமென தமிழரசு கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழ். வடமராட்சியில் நேற்று (16) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், மே 28ஆம் திகதிக்குள் அந்த வர்த்தமானி இரத்து செய்யப்பட வேண்டும் எனவும், அப்படி செய்யாவிட்டால் மே 29ஆம் திகதியில் இருந்து நாட்டை மட்டுமல்ல உலகையும் உலுக்கும் வகையில் பெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
சுனாமி மற்றும் இடம்பெயர்வுகள் காரணமாக ஆவணங்களை இழந்த மக்கள் தற்போது அரசின் காணி சுவீகரிப்பால் பாதிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.
“இது ஒரே கட்சிக்குரிய எதிர்ப்பு அல்ல. நிலம் என்பது எதையும் விட முக்கியமானது. இனம் தொடர்வதற்கே அது அடிப்படை. எனவே அனைத்து கட்சிகள், அமைப்புகள், மக்கள், விசேடமாக பாதிக்கப்பட்டவர்களும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்,” என அவர் அழைப்பு விடுத்தார்.
மே 29 ஆம் திகதி தொடங்கும் இந்த போராட்டம் அரசின் செயலை எதிர்த்து இல்லாமல், மக்களின் உரிமையை பாதுகாக்கும் போராகவும், சர்வதேச கவனத்தை பெறும் அளவுக்கு நடைபெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
.