(அபூ உமர்)
இறக்காமப் பிரதேசத்துக்கான தனி நீதிமன்றத்தை அமைக்க நீதி அமைச்சு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை இன்று(23.05.2025) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை (திருத்தம்) தொடர்பான குழு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், தமிழை தாய்மொழியாகக் கொண்ட மக்களுக்கான நீதிமன்ற நடைமுறைகள் சிங்கள மொழியில் நடைபெறுவதை கடுமையாக விமர்சித்தார்.
இறக்காம பிரதேசத்தில் சுமார் 18,000 பேர் வாழ்கின்றனர். அவர்களில் 94% பேர் தமிழர். 2012ஆம் ஆண்டு வரை தமிழ் மொழியை நீதிமன்ற மொழியாகக் கொண்ட அக்கரைப்பற்று நீதிமன்ற வலயத்தில் இந்தப் பகுதி இருந்தாலும், பின்னர் அறிவிப்பு இல்லாமல் சிங்கள மொழி பயன்படுத்தும் அம்பாறை நீதிமன்ற வலயத்தில் இணைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
இதனால் வழக்குகளின் போது மொழிபெயர்ப்பு தேவைகளுக்காக மக்கள் அதிக செலவுகளையும் தாமதங்களையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் விளக்கினார். இது அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதற்குச் சமம் என அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், 2021ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட நீதிமன்ற எல்லை மீளாய்வுக் குழுவின் பரிந்துரையின்படி, இறக்காமம் அக்கரைப்பற்று நீதிமன்ற வலயத்திற்குள் கொண்டுவரப்படவேண்டும் எனவும், அல்லது தனி நீதிமன்றம் அமைக்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனை அடிப்படையாக கொண்டு, தற்போது வரையறுக்கப்பட்ட நீதிமன்ற எல்லைகளை திருத்தி, நீதி அமைச்சு உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என எம்.பி. உதுமாலெப்பை தனது உரையில் வலியுறுத்தினார்.