அரசியல் உயர் பதவிகளில் இருந்தவர்களுக்கு வழங்கப்பட்ட சில சிறப்புரிமைகள் மற்றும் நிபந்தனையற்ற ஓய்வூதியங்கள் இனி வரையறைக்குட்பட்டவையாக மாறும் வழியை அரசு உருவாக்கியுள்ளது.
அரசாங்கத்தின் சமீபத்திய கொள்கைப் பிரகடனமான “வளமான நாடு, அழகான வாழ்வு” என்ற நோக்கத்தை நடைமுறைப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக, 1986 ஆம் ஆண்டின் 4ம் இலக்க ஜனாதிபதி உரித்துக்கள் சட்டமும், 1977 ஆம் ஆண்டின் 01ம் இலக்க நாடாளுமன்ற ஓய்வூதியச் சட்டமும் இரத்துச் செய்ய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வெளியிட்டார்.
அதன்படி, முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் வழங்கப்படும் விசேட சலுகைகள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 5 ஆண்டுகள் பதவியில் இருந்ததற்குப் பிறகு பெறும் ஓய்வூதியம் இரண்டையும் நீக்கும் வகையில் சட்டமூலங்களைத் தயாரிக்க, சட்ட ஆலோசகர் மூலமாக தேவையான நடவடிக்கைகள் எடுக்க அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.