(அபூ உமர்)
ஜனாதிபதி அவர்களால் மன்னிப்பு வழங்கப்பட்ட கைதிகள் தொடர்பான மோசடி சம்பவம், நாட்டின் நீதித்துறையின் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்கும் வகையில் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை கடுமையாக கண்டனம் தெரிவித்தார்.
இன்று (17) பாராளுமன்றக் கட்டடத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் ஹர்ஷன நானயக்கார தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட உறுப்பினர் உதுமாலெப்பை, குறித்த சம்பவம் தொடர்பாக விசேட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நீதித்துறையின் மதிப்பை மீட்டெடுக்கும் முயற்சிகள் இப்போது அவசியம் என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:
“ஜனாதிபதிகளின் மன்னிப்பு பெற்ற கைதிகள் பட்டியல் 59 இருப்பதாக தெரியவருகிறது. இந்த பட்டியலில் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளமை கவலையை ஏற்படுத்துகிறது. எனவே பாரபட்சமின்றி, உரிய சட்ட நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும்.”
அதேவேளை, நீதி அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு இதுவரை எவ்வித திட்டமோ, செயற்பாடோ மேற்கொள்ளவில்லை என அவர் விமர்சித்தார்.
“இந்த அமைச்சின் நோக்கம் என்ன? எதிர்காலத்தில் என்ன செயற்பாடுகள் இருக்கின்றன? என்ற கேள்விகளுக்கு இதுவரை தெளிவான விளக்கம் இல்லை. தேசிய ஒருமைப்பாட்டை முன்னேற்ற வேண்டிய முக்கிய அமைச்சு செயலற்றதாக இருக்கக்கூடாது,” என அவர் கோரினார்.
இதற்குப் பதிலளித்த நீதி அமைச்சர் ஹர்ஷன நானயக்கார,
“மன்னிப்பு பெற்ற கைதிகள் தொடர்பான மோசடி சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதே சமயம், தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் எதிர்கால திட்டங்கள் பற்றிய விளக்கங்கள் அடுத்த கூட்டத்தில் முன்வைக்கப்படும்,” என்று தெரிவித்தார்.