(அபூ உமர்)
கொழும்பு–மட்டக்களப்பு இடையிலான விமான சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனக் கோரி, கிழக்கு மாகாணத்தின் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் விஜித ஹேரத்திற்கு வலியுறுத்தியுள்ளனர்.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. விஜித ஹேரத் தலைமையில் அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் பாராளுமன்றக் கட்டடத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், இடைநிறுத்தப்பட்டுள்ள கொழும்பு–மட்டக்களப்பு விமான சேவை மீண்டும் துவக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இச்சேவையின் மூலம் கிழக்கு மாகாண மக்கள் குறிப்பாக மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பல வகைகளில் பயனடைவார்கள் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதேபோல் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை உரையாற்றுகையில்
கடந்த காலங்களில் கொழும்பிலிருந்து அம்பாறை மற்றும் மட்டக்களப்பு விமான நிலையங்களுக்கு இடையிலான சேவை சிறப்பாக நடைபெற்றதையும், அதன் மூலம் மக்கள் நன்மை பெற்றதையும் நினைவுபடுத்தினார். தற்போது அந்த சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதை கவனத்தில் எடுத்த அவர், மீண்டும் அந்த சேவையைத் தொடங்கவேண்டும் என வலியுறுத்தினார்.
இதையடுத்து, விமான சேவைகள் மீள்துவங்குவதற்கான வாய்ப்பு, திட்டமிடல் மற்றும் நடைமுறை நடவடிக்கைகள் குறித்து இலங்கை விமானப்படை மற்றும் தொடர்புடைய உயர் அதிகாரிகளிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் பணிப்புரை செய்தார்.
இந்தக் கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால், கிழக்கு மாகாண மக்களின் போக்குவரத்து சிரமங்கள் குறையும் என்றும், சுற்றுலா மற்றும் உள்ளூர் பொருளாதாரம் வளர்ச்சிபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.