Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

ஒலுவில் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்ட 22 மாணவர்களுக்கு எதிராக பொலிஸ் விசாரணை

Posted on June 26, 2025 by Admin | 246 Views

இலங்கையின் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பொறியியல் பீட மாணவர்கள் 22 பேர் கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடைநீக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் என கூறப்படுகிறது. இவர்கள், முதலாமாண்டு மாணவர்களை பகிடிவதைக்கு உட்படுத்தியதாக பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். ஜுனைதீன் தெரிவித்தார்.

இந்த சம்பவம் மூன்று வாரங்களுக்கு முன்னர் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட விடயத்தைப் பற்றிய முறைப்பாடு கடந்த 19ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கிடைத்ததுடன், அதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

இந்த காணொளிகளில் தெளிவாக அடையாளம் காணப்பட்ட மாணவர்களே தற்போது வகுப்புக்களிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், சம்பவத்தை விசாரிக்க விசேட உள்நிலை விசாரணைக் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில், பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் தனிப்பட்ட குற்றவியல் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். இதற்கமைய, சம்பந்தப்பட்ட மாணவர்கள் (24.06.2025) முதல் வாக்குமூலங்கள் வழங்க ஆரம்பித்துள்ளதாக அம்பாறை மாவட்டத்தின் ஒரு மூத்த பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

பகிடிவதையை ஒழிக்க பல்கலைக்கழக நிர்வாகம் மற்றும் சட்ட அமுல் அதிகாரிகள் தீவிரமாக செயல்படுகின்றனர். இதற்கிடையில், அண்மையில் சப்ரகமுவ பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்தில் பகிடிவதையின் விளைவாக இரண்டாம் ஆண்டு மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கதாகும்.