திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியில் இன்று காலை நடந்த பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் மணிக்கூட்டுக்கோபுரச் சந்தியில், மின்கம்பத்தை மோதி சுற்றுலா பேருந்தொன்று விபத்துக்குள்ளானது. குருநாகலியில் இருந்து புல்மோட்டை நோக்கி பாடசாலை மாணவர்களுடன் பயணம் செய்த பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்த சாரதிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, வழியில் இருந்த இரண்டு மோட்டார் சைக்கிள்களை மோதி, பின்னர் மின்கம்பத்துடன் மோதியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மின்கம்பமும், மின்சார இணைப்பு வயர்களும் சேதமடைந்துள்ளன.
அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் பயணித்த மாணவர்கள் மற்றும் பிற பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர்.
மாரடைப்பு காரணமாக உடனடியாக கந்தளாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பேருந்து சாரதி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதியடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.