இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) உடனடியாக இடைநிறுத்த வேண்டும் எனவும், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை (Online Safety Act) முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் வலியுறுத்தியுள்ளார்.
கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக நிரூபணமின்றி தடுப்பில் வைக்கப்பட்டுள்ளோரின் நிலைமைகளை எடுத்துரைத்த அவர், “இவர்கள் தொடர்பான வழக்குகள் விரைவில் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்; குற்றச்சாட்டுகள் இல்லாவிட்டால் அவர்கள் விடுவிக்கப்பட வேண்டும்” என்றார்.
இலங்கையில் தனது அதிகாரப்பூர்வ பயணத்தை முடிப்பதற்குமுன், கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த கருத்துகளை தெரிவித்தார்.
இதேநேரத்தில், ஒரே பாலின உறவுகளை குற்றமற்றதாக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் இருப்பதாகவும், அது விரைவில் சட்டமாகும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை காவல்துறையில் மறுசீரமைப்புகள் தேவைப்படுவதாகவும், பொதுமக்கள் மீது விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் அநியாயமாக மேற்கொள்ளப்படக்கூடாது என்பதையும் அவர் வலியுறுத்தினார்.
மனித உரிமைச் சிக்கல்களை சீர்செய்ய இலங்கை அரசுடன் தொடர்ந்தும் ஈடுபாடுடன் பணியாற்ற ஐ.நா. உறுதியுடன் இருக்கிறது என உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் தெரிவித்தார்.
(Copid-Hiru news)