நாட்டிலுள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை அரச மருத்துவமனைகள் மற்றும் முன்னணி தனியார் மருத்துவமனைகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், அரச மருந்தகங்களை நிறுவும் புதிய திட்டமொன்று எதிர்காலத்தில் செயல்படுத்தப்படும் என சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டியில் உள்ள அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர், “பொது மக்களுக்கு தரமான மருந்துகளை நியாயமான விலையில் வழங்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்” என்று தெரிவித்தார்.
அத்துடன், கடந்த ஆண்டில் அரசு மருந்தகக் கூட்டுத்தாபனம் வெறும் 68 விலைமனுக்களை மட்டுமே வெளியிட்டிருந்த நிலையில், இவ்வருடத்தின் முதல் ஐந்து மாதங்களிலேயே 268 விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளன என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மருந்துகளுக்கான கொள்முதல் நடவடிக்கைகளை தீர்மானிக்கப்பட்ட காலவரம்பிற்குள் நிறைவேற்றுவதன் மூலம், அடுத்த ஆண்டு அரச மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்துகளை தரநிலையை சீராகக் பேணியவாறு வழங்க முடியும் எனவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தினார்.