பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான கடவுச்சீட்டைப் பெறுவதில் வேகமாக முன்னேறவும், எவ்வித இடைத்தரகர் அல்லது மூன்றாம் தரப்பு நபர்களிடம் பணம் செலுத்துவதைத் தவிர்க்கவும், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்காக, கடவுச்சீட்டுக்கான கட்டணத்தை திணைக்களத்தின் நிர்வாக வங்கியில் (Special Counter) நேரடியாக செலுத்தி, அதிகாரப்பூர்வ பற்றுசிற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.
அதன்பின், திணைக்களத்தின் கடவுச்சீட்டு விநியோக மையத்தில் நேரடியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பித்து, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம் என்று திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஜூன் 2ஆம் திகதி முதல், பத்தரமுல்லைத் தலைமை அலுவலகத்தில், ஒரு நாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான டோக்கன்கள் காலை 6.30 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை வழங்கப்படும்.ஒரு நாள் சேவையை நாடும் விண்ணப்பதாரர்கள் முன்னதாக நேர முன்பதிவைச் செய்து இருக்க வேண்டும்.
அவசர தேவைகள் அல்லது முன்னுரிமை அடிப்படையில் சேவை தேவைப்படும் விண்ணப்பதாரர்களும் இந்த நேரத்திற்குள் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம்.மேலும், இந்த நேரத்திற்குள் வரும் அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும், தேவையான டோக்கன்கள் வழங்கப்படும் என்பதனால், அலுவலகத்திற்கு முந்தைய இரவிலேயே வரிசையில் நிற்க வேண்டிய அவசியமில்லை எனவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
தகுந்த நாளில், காலை 6 மணிக்குப் பிறகு வருவதன் மூலம், சீரான முறையில் அனைத்து நடைமுறைகளையும் முடிக்க முடியும் எனவும் திணைக்களம் உறுதியளித்துள்ளது.