இறக்காமம் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பதவியை கட்சியின் அனுமதி இல்லாமல் ஏற்றுக்கொண்டதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் (SLMC) உறுப்பினர் ஜனாப் நசீர் முகம்மது ஆசிக் மீது கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
SLMC கட்சியின் கொள்கைகள் மற்றும் அரசியலமைப்பை மீறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஆசிக், கட்சியின் தெளிவான கட்டளைகளை புறக்கணித்து பிரதி தவிசாளர் பதவியை ஏற்றதாக கட்சி தலைமையிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கட்சி செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். நிஸாம் காரியப்பர் வெளியிட்டுள்ள கடிதத்தில், “கட்சியின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையில் நடந்துகொண்டதற்காக ஏன் உங்களை கட்சியிலிருந்து நீக்கக் கூடாது என ஏழு நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமாக விளக்கமளிக்க வேண்டும்” எனக் கூறப்பட்டுள்ளது.
விளக்கம் வழங்கத் தவறினால், அதுவே குற்றத்தை ஒப்புக்கொண்டதாகக் கருதப்படும் என்றும், எந்தவிதமான மேலதிக அறிவிப்பும் இன்றி கட்சியிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதன்போது, விசாரணை முடிவுகள் வெளியாகும் வரை ஆசிக் முகம்மது அவர்களது SLMC உறுப்பினர் பதவியும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த செய்தி பொதுமக்கள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்வையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. SLMC தரப்பிலிருந்து கட்சி ஒழுங்கமைப்பை நிலைநிறுத்தும் நோக்கில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகத் தெரிகிறது.