மெட்டாவின் AI (கணினி நுண்ணறிவு) தளவமைப்பு, பயனர்கள் ஃபேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யாத படங்களையும் ஸ்கேன் செய்கிறது என வெளியான தகவல், பெரும் பிரைவசி சர்ச்சையையும் மக்களிடத்தில் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து மெட்டா தரப்பில் விளக்கமளிக்கையில், “இந்த ஸ்கேனிங் அம்சம் பயனரின் விருப்பத்தின் அடிப்படையில் மட்டுமே செயலில் இருக்கும். விரும்பினால், பயனர் இந்த அம்சத்தை எப்போது வேண்டுமானாலும் டிசேபிள் செய்யலாம்” என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ‘கிளவுட் பிராசஸிங்’ அம்சத்தை முடக்கியால், ஏற்கனவே சேமிக்கப்பட்ட படங்கள் 30 நாட்களுக்குள் மெட்டாவின் கிளவுட் சேமிப்பகத்திலிருந்து நீக்கப்படும் என நிறுவனத்தினர் உறுதியளித்துள்ளனர்.
எனினும், பயனர்கள் வெளிப்படையாக ஒப்புதல் அளிக்காத புகைப்படங்களை ஸ்கேன் செய்வது, மெட்டா கடந்த காலங்களில் சந்தித்த பிரபலமான பிரைவசி குறைபாடுகளை மீண்டும் நினைவூட்டுகிறது.
2007 முதல், Facebook மற்றும் Instagram தளங்களில் பெரியவர்களால் பதிவேற்றப்பட்ட உள்ளடக்கங்களை AI பயிற்சிக்காக பயன்படுத்தியதை மெட்டா ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், அதற்கான முழுமையான விளக்கங்களை வழங்க மறுத்தது.
இப்போது, பயனர்கள் பதிவேற்றம் செய்யாத படங்களுக்கே AI அணுகும் நிலைமை, இந்த படங்களையும் எதிர்காலத்தில் மெட்டா AI பயிற்சிக்குப் பயன்படுத்த திட்டமா? என்ற சந்தேகங்களை கிளப்பியுள்ளது. இதற்கான உறுதியான பதிலை மெட்டா இன்னும் வழங்கவில்லை.
இதனால், மெட்டா பயன்பாட்டாளர்கள் அனைவரும் தங்களின் பிரைவசி அமைப்புகளை கவனமாக பரிசீலித்து, எந்த அனுமதியையும் வழங்கும் முன் தெளிவாக செயல்பட வேண்டும் என்பதே இன்றைய முக்கியமான பரிந்துரை.