எதிர்காலத்தில் எரிபொருளின் விலை லீட்டருக்கு 50 சதமாவது குறையக்கூடிய நிலை காணப்படும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடி தெரிவித்தார்.
இதேவேளை, விரைவில் பொதுத் தேர்தல் நடத்தும் யோசனை இல்லை என்றும், அரசின் முக்கிய கவனம் நாட்டின் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் மீது இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
அவர் இந்தக் கருத்துகளை, “மறுமலர்ச்சி காலத்தில் பொறியியல் நிபுணர்களின் பங்கு” என்ற தலைப்பில் தேசிய அறிஞர்கள் அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்தினபுரி மாவட்ட பொறியியல் நிபுணர்கள் சந்திப்பில் உரையாற்றும் போது வெளியிட்டார்.
அமைச்சர் மேலும் கூறுகையில்,
“சமீபத்தில் எரிபொருள் விலை உயரும் என மக்கள் எதிர்பார்ப்பில் தேவையில்லாமல் எரிபொருள் சேமித்து வைத்துள்ளனர். ஆனால் இது ஒரு தவறான எண்ணம். சந்தையின் இயல்புக்கு ஏற்ப, விலைகள் தவிர்க்க முடியாமல் குறைவதற்கான வாய்ப்பு அதிகம்,” என அவர் தெரிவித்தார்.
எரிபொருள் விலைகள் குறையும் என்பது உறுதியானதுதான் என்றாலும், அது எந்த அளவுக்கு குறையும் என்பதை நிரந்தரமாக கணிக்க முடியாது எனவும், லீட்டருக்கு 50 சதமாவது குறையக்கூடிய நிலை உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்