அதிகாரம் மற்றும் செல்வத்தின் முன்பாக அனைத்து நல்ல விடயங்களையும் அழித்து, பாதகமான மதிப்புகளைச் சேர்த்த ஒரு சமூகத்தில் மனிதாபிமான உயிரூட்டத்தை மீண்டும் கொண்டு வருவதன் மூலம் ஒழுக்கமான சிறந்த சமூகமாகக் கட்டியெழுப்ப வேண்டும். அவ்வாறு செய்வதற்கு இந்த நாட்டின் மகா சங்கத்தினர் பெரும் பங்களிப்பைச் செய்ய முடியும்.
கல்னேவா மகாவலி மைதானத்தில் நேற்று(30) நடைபெற்ற இலங்கை ராமான்ய மகா பீடத்தின் 74 ஆவது உபசம்பதா மஹோத்சவத்தின் தொடக்க விழாவில் பங்கேற்று உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
உடல் ரீதியாக எட்ட வேண்டிய வெற்றிகள் போன்றே ஆன்மீக ரீதியாகவும் அடைய வேண்டிய பல சாதனைகள் உள்ளன என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நீண்ட காலமாக இரக்கம், கருணை மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்ட தர்மத்தைப் போதித்து, அந்த தர்மத்தை செவிசாய்த்த ஒரு நாட்டிற்கு இன்று நேர்ந்துள்ள நிலைமையை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.
எனவே, ஒழுக்கமான மற்றும் சிறந்த சமூகத்தை உருவாக்கும் பொறுப்பை நிறைவேற்ற அனைவரும் தாமதமின்றி ஒன்றிணைந்து அர்ப்பணிக்க வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். பௌத்த மதத்தின் நிலைத்தன்மையைப் பேணுவதில் உபசம்பதா போன்றன மிகவும் முக்கியமானவை என்றும் அவர் கூறினார்.
மேலும், சில அரசியல் குழுக்கள் அதிகாரத்தைக் கைப்பற்ற இனவாதத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தியதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதன் ஊடாக அரசியல்வாதிகளன்றி வடக்கிலும் தெற்கிலும் உள்ள அப்பாவி பெற்றோர்களின் பிள்ளைகளே பலியானதாகவும் தெரிவித்தார்.
இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப பாடுபட வேண்டும் என்றும்,அனைவருக்கும் ஜனநாயக ரீதியாகவும் சுதந்திரமாகவும் செயல்படும் திறன் இருந்தாலும், இனவாதம் மீண்டும் ஒருபோதும் தலைதூக்க அனுமதிக்கப் போவதில்லை என்றும் வலியுறுத்தினார். எனவே, இனவாதத்தை நிராகரித்து தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
அதற்கு சட்டங்கள் போதுமானதாக இல்லாவிட்டால், சட்டங்கள் பலப்படுத்தப்பட்டு இனவாதம் தோற்கடிக்கப்படும் என்றும், சிங்களவர்கள், தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றாக வாழும் ஒரு சமூகத்தை உருவாக்குவதே தனது அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் கூறினார்.
பிக்குமாரின் ஒழுக்கம் குறித்த கருத்தாடல் குறித்தும் ஜனாதிபதி கருத்துத் தெரிவித்தார். அதில் மகாநாயக்க தேரர்கள் ஒரு பொதுவான ஒருமித்த கருத்தை எட்டினால் அந்த கருத்தாடலை அரசாங்கம் முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும் என்றும் கூறினார். விஹார தேவாலகம் சட்டத்தின் 42 மற்றும் 43 ஆம் பிரிவுகளைத் திருத்துவதற்கான கோரிக்கை புத்தசாசன அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், அது ஏற்கனவே சட்ட வரைஞர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.