இலங்கையில் வீதி பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில், அனைத்து வகை வாகன சாரதிகளும் இனிமேல் கட்டாயமாக இருக்கைப் பட்டி (Seat Belt) அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறைகள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது. கனரக மற்றும் சிறிய ரக வாகனங்கள் இரண்டையும் இயக்கும் சாரதிகள் இந்த சட்டத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
பொதுவாக வீதி விபத்துகளில் உயிரிழப்பு மற்றும் காயங்களுக்கு முக்கிய காரணியாக இருக்கைப் பட்டி அணியாமை கருதப்படுகிறது. அதனை தடுக்கவும், பயணிகளின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்தும், புதிய கட்டுப்பாடுகள் பின்வருமாறு அமுல்படுத்தப்படுகின்றன:
🔸 ஆகஸ்ட் 1 முதல், சிறிய ரக வாகனங்களில் பின்புற இருக்கையில் பயணிக்கும் அனைவரும் இருக்கைப் பட்டி அணிய வேண்டும்.
🔸 செப்டம்பர் 1 முதல், அனைத்து வகை வாகனங்களிலும் (சிறிய, கனரக) பயணிக்கும் அனைத்து பயணிகளும் இருக்கைப் பட்டி கட்டுவது கட்டாயமாகும்.
இந்த அறிவிப்புகள், நாட்டில் வீதி விபத்துக்களை குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட 85 திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டவை என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.