அட்டாளைச்சேனை பிரதேசத்தில், ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக் மீது தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பான முறைப்பாடு, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் நேற்று இரவு பதிவு செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின் படி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் றியா மசூர் என்பவர் தலைமையிலான குழுவே, ஊடகவியலாளரின் மீது தாக்குதல் நடத்தியது என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம், நேற்று இரவு அட்டாளைச்சேனை பொது மைதானத்திற்கு அருகிலுள்ள பகுதியில் இடம்பெற்றது.
ஊடகவியலாளர் மப்றூக் தனது நண்பர்கள் மற்றும் பிரதேச சபை தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் உள்ளிட்ட சிலருடன் உரையாடிக் கொண்டிருந்த வேளையிலேயே, காரில் வந்த றியா மசூர் மற்றும் இருவர் அவரை முற்றுகையிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.
தான் எழுதிய செய்தி தொடர்பாக கேள்வி எழுப்பிய றியா, “என்னைப் பற்றி எப்படி நீ செய்தி எழுதுவாய்?” எனக் கூறி தாக்குதல் மேற்கொண்டதாக மப்றூக் தெரிவித்துள்ளார். மேலும், தாக்கியவர்கள் மது அருந்திய நிலையில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
அங்கிருந்த சிலர் உடனடியாக தலையீடு செய்ததால்தான், தன்னுடைய உயிர் தப்பியது என்றும், இல்லையெனில் பரிதாபகரமான நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என்றும் தாக்குதலை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், றியா மசூரின் கூட்டத்தினருக்கு, ஏற்கனவே பொதுமக்களை தாக்கிய வழக்குகள், போதைவஸ்துப் பாவனை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், ஊடகவியலாளர் மப்றூக் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.