ஜப்பானில் வரவிருக்கும் சுனாமி பற்றி சமூக ஊடகங்களில் பரவும் வதந்திகள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. “புதிய பாபா வங்கா” என்று அழைக்கப்படும் தீர்க்கதரிசி ரியோ தட்சுகியின் கடந்த காலக் கணிப்புகள் பலவும் நடந்து விட்டதனால், அவரது புதிய எச்சரிக்கைகள் சமூகத்தில் கவலையை ஏற்படுத்தியுள்ளன.
தட்சுகி, 1999 இல் கணித்த கணிப்புகளில், வேல்ஸ் இளவரசி டயானா மறைவு, 2011 ஜப்பான் நிலநடுக்கம் மற்றும் சுனாமி, கொரோனா போன்ற நிகழ்வுகளை முன்கூட்டியே கூறியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது. இவரின் கணிப்புகளை சிலர் தீவிரமாக நம்பி வழிபடும் அளவுக்கு சென்றுள்ள நிலையில், அவர் 2025, ஜூலை 5 அன்று ஜப்பானில் கடும் நிலநடுக்கம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பேரலை ஏற்படும் என்று முன்கூட்டியே கூறியிருப்பது, தற்போதைய பதற்றத்துக்கு காரணமாகியுள்ளது.
இந்நிலையில், ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள டோகாரா தீவுகளில் புதன்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் 5.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதே நேரத்தில் ஷின்மோ எரிமலையில் வெடிப்பு ஏற்பட்டது என்பதும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த வதந்திகளால், ஹாங்காங், சீனா, தாய்லாந்து, வியட்நாம் உள்ளிட்ட கிழக்கு ஆசிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஜப்பான் பயணத்தை ரத்து செய்து வருகின்றனர். இதனால் சுற்றுலா துறையில் மட்டும் சுமார் 3.9 பில்லியன் டொலர் இழப்பு ஏற்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், ஜப்பான் நில அதிர்வு நிபுணர்கள் இந்த வதந்திகளை முற்றிலும் மறுத்துள்ளனர். “ஜூலை 5ஆம் தேதி எவ்விதமான சுனாமி எச்சரிக்கையும் இல்லை, இயற்கை அடிப்படையில் பெரிய நிலநடுக்கம் ஏற்படக்கூடிய சாத்தியம் இல்லை” என வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் அமைதியாக இருக்க வேண்டியதும், அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே நம்ப வேண்டும் எனவும் தட்சுகி விரிவாகக் கூறியுள்ளார். சமூக ஊடகங்களில் பரவும் தவறான தகவல்களால் அச்சமடைய வேண்டாம் என்றும் நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.