அரசாங்க பாடசாலைகளில் விளையாட்டு போட்டிகள், உற்சவங்கள் உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்காக மாணவர்களிடம் நிதி வசூலிக்கப்படுவதாகக் கல்வியமைச்சுக்கு முறைப்பாடுகள் வந்துள்ளதாக பிரதி கல்வி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அவர் ஊடகங்களுக்கு தெரிவித்ததாவது,
“சில பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடமிருந்து நிதி திரட்டப்படுவதாக தொடர்ச்சியான புகார்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க விசாரணை குழு ஒன்று நியமிக்கப்படவுள்ளது,” என கூறினார்.
மேலும், “பாடசாலைகளின் நிகழ்வுகளுக்காக மாணவர்களிடம் நிதி பெறக்கூடாது என்ற சுற்றறிக்கையை கல்வியமைச்சு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. எனினும் சில பாடசாலைகளில் இதுவே மீறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றை பரிசீலித்து, தெளிவான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,” என்றும் அவர் கூறினார்.
அரச பாடசாலைகளில் நிதி சேகரிப்பு சம்பந்தமான முறைப்பாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், அதனை கவனத்துடன் ஆய்வு செய்வதற்காகவே விசாரணைக் குழு நியமிக்கப்படுவதாகவும் பிரதி அமைச்சர் வலியுறுத்தினார்.