அதிமேதகு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்படும் Clean Sri Lanka தேசிய செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக, அட்டாளைச்சேனை கடற்கரையோரம் இன்று (09.07.2025) சுத்தப்படுத்தப்பட்டதோடு, டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வு, கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜெயந்த லால் ரத்னசேகர, கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர், உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஆகியோரின் ஒழுங்கமைப்பின் கீழ், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஏ.எஸ்.எம். உவைஸ் அவர்களின் தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை அவர்களின் ஆலோசனையின் பிரகாரம் செயற்படுத்தப்பட்டது.
ஜும்ஆ பள்ளி வட்டார உறுப்பினர் கௌரவ ஏ.எல். பாயிஸ் (ISA) அவர்களின் நெறிப்படுத்தலுடன் அட்டாளைச்சேனை 07 பகுதியில் உள்ள பொது மக்களின் பொழுதுபோக்கு இடமான கடற்கரைப் பகுதி சுத்தம் செய்யப்பட்டது. மேலும், கடற்கரை வீதி செப்பனிடல், பழுதடைந்த தெருமின் விளக்குகளைப் பழுதுபார்த்து திருத்தும் பணிகள் ஆகியனவும் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் கெளரவ பிரதித் தவிசாளர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான கெளரவ அஸ்வர் சாலிஹ், S.I.M. ரியாஸ், பிரதேச சபையின் செயலாளர் L.M. இர்பான் உள்ளிட்ட சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், சமூக அமைப்புகள், பொதுமக்கள் என பலரும் ஒருமித்த பங்களிப்பை வழங்கினர்.
இத்தகைய சுத்தம் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் எதிர்காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட மற்ற பகுதிகளிலும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.