அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தலைமையில், மாவட்டத்தில் உள்ள 18 உள்ளூர் ஆட்சி மன்றங்களின் தவிசாளர்களும், அச்சபைகளின் செயலாளர்களும் கலந்துகொண்ட முக்கிய ஆலோசனைக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை (08.07.2025) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பிரதேச சபைகளுக்குரிய எதிர்கால அபிவிருத்தி திட்டங்கள், பகுதிநேர தேவைகள், மற்றும் ஆளணிக் கட்டமைப்புகள் தொடர்பாக விரிவான விவாதங்கள் இடம்பெற்றன.
கூட்டத்தின்போது, மக்கள் நலனில் மையம்கொண்ட திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தும் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டதுடன், உள்ளூராட்சி மன்றங்கள் எதிர்காலத் திட்டங்களை சீராக வகுக்க ஒன்றுபட்ட அணுகுமுறை தேவைப்படும் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது.
அம்பாறை மாவட்ட வளர்ச்சியில் உள்ளூராட்சி மன்றங்களின் பங்கு மிக முக்கியமானது என்பதையும், அவற்றின் திறன் மேம்பாட்டை நோக்கிய திட்டங்களும் விரைவில் அமல்படுத்தப்பட உள்ளன என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.