அம்பாறை மாவட்டத்தின் சுகாதாரத் துறையை வினைத்திறனுடன் முன்னெடுத்து செல்லும் நோக்கில், மாவட்டத்திற்குட்பட்ட உள்ளூராட்சி மன்ற தலைவர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று (வெள்ளிக்கிழமை) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்றது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில், கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பதிகாரி டொக்டர் எம்.சி.எம். மாஹிரின் ஒருங்கிணைப்பில் இந்நிகழ்வு நடைபெற்றது.
இச் சந்திப்பில் அக்கரைப்பற்று மாநகர சபையின் பிரதி முதல்வர் மற்றும் அட்டாளைச்சேனை, ஆலையடிவேம்பு, திருக்கோவில், நிந்தவூர், நாவிதன்வெளி, காரைதீவு ஆகிய பிரதேச சபைகளின் தவிசாளர்கள் கலந்துகொண்டனர்.
சந்திப்பின் போது, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ், அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் நிறுவப்பட்ட மின்தூக்கியை (லிப்ட்) உடனடியாக செயற்படுத்த வேண்டும் எனவும், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடத்தில் நோயாளிகளுக்கான விடுதியை செயல்படுத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
மேலும், வைத்தியசாலையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சுகாதார அதிகாரிகள் உறுதியளித்தனர்.