உள்ளூர் சந்தைகளில் தேங்காய் எண்ணெய் விற்பனையை தரமான முறையில் ஒழுங்குபடுத்துவதற்காக புதிய அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது என தேங்காய் மேம்பாட்டு அதிகார சபையின் தலைவர் சாந்த ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், “தரச்சான்று இல்லாத பைகள், பழைய கலன்கள் அல்லது பிளாஸ்டிக் போத்தல்களில் விற்கப்படும் தேங்காய் எண்ணெய்கள் எதிர்காலத்தில் சட்டவிரோதமாகக் கருதப்படும். இந்த விதிமுறைகளை மீறுபவர்களிடம் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை சோதனைகள் நடத்தி, சட்ட நடவடிக்கைகள் எடுக்கும்,” என வலியுறுத்தினார்.
அத்துடன், புதிய ஒழுங்குமுறைகளுக்கு உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பழகிக்கொள்ள தேவையான காலமாக 6 முதல் 12 மாதங்கள் வரை அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த புதிய நடைமுறைகள், நுகர்வோருக்கு பாதுகாப்பான மற்றும் தரமான தேங்காய் எண்ணெய் கிடைக்கச் செய்வதற்கான நிலை ஏற்படும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.