அம்பாறை – ஒலுவில்:
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஏற்பட்ட பதற்றமான நிலைமையை அடுத்ததாக, முதல் வருட மாணவர்கள் விடுதிகளை இன்றிரவு எட்டு மணிக்குள் காலி செய்யுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நாளை (செவ்வாய்) நடைபெறவிருந்த பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள், இன்று அதிகாலை முதலாம் வருட மாணவர்கள் சிலர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலையடுத்து எடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பகிடிவதையின் அடையாளமாக சில வீடியோக்களை கையடக்கத் தொலைபேசியில் பதிவு செய்து வெளியிட்டதைத் தொடர்ந்து, அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார். மேலும், காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நோயாளர் காவு வண்டியின் சாரதியையும் சிலர் தாக்கியுள்ளனர்.
பொறியியல் பீடத்தில் சிரேஷ்ட மாணவர்கள் புதுமுக மாணவர்களுக்கு பகிடிவதை மேற்கொள்வது தொடர்பாக கடந்த மாதம் தொடங்கப்பட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கமைய, 22 மாணவர்களுக்கு வகுப்புத்தடை விதிக்கப்பட்டதுடன், 12 பேரை காவல்துறையினர் விளக்கமறியலில் வைத்துள்ளனர்.
இன்று நடந்த சம்பவம் தொடர்பாகவும் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவித்துள்ளார்.