அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழிலுக்கான ஒத்துழைப்பையும் அபிவிருத்தியையும் வலியுறுத்தும் நோக்கில், மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று மாவட்ட செயலகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
இக்கூட்டம், மாவட்ட செயலாளர் சிந்தக அபேயவிக்கிரம அவர்களின் ஏற்பாட்டில், கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ தலைமையில், கடற்றொழில், நீர்வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் வளத்துறை பிரதி அமைச்சர் ரத்ன கமகே அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடை பெற்றது.
அம்பாறை மாவட்ட செயலகத்தின் ஏ.ஐ. விக்கிரம கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், கடற்றொழிலின் எதிர்கால முன்னேற்றம், மீனவர்கள் சந்திக்கும் சவால்கள், வளமான கடல்சார் வளங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மற்றும் சமுதாய வலுவூட்டலுக்கான திட்டங்கள் பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதில், பாராளுமன்ற உறுப்பினர்களான ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, எம்.எஸ். அப்துல் பாசித், கே. கோடிஸ்வன், அபூபக்கர் ஆதம்பாவா, மஞ்சுல சுகத் ரத்நாயக ஆகியோர் கலந்து கொண்டு, தங்களது பரிந்துரைகளையும் முன்வைத்தனர்.
மேலும், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகளும் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தின் முடிவுகள் அம்பாறை மாவட்ட கடற்றொழிலுக்குப் புதிய பாதையையும், தெளிவான நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டும் வகையில் அமைந்தது.