மீரிகம பகுதியில் உள்ள துரியன் தோட்டமொன்றில் 19 வயது இளைஞர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தோட்ட உரிமையாளரை ஜூலை 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்லை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த திங்கட்கிழமை (14) மாலை, மூன்று இளைஞர்கள் துரியன் தோட்டத்திற்குள் சட்டவிரோதமாக நுழைந்து பழங்களை பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்க முயன்ற தோட்ட உரிமையாளர், இவர்களில் ஒருவரான 19 வயதுடைய இளைஞரிடம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இரு இளைஞர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக மீரிகம பொலிஸார் மேற்கொண்ட விசாரணையின் போது, தோட்ட உரிமையாளர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவர் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.