அக்கரைப்பற்று மீரா ஓடை பகுதியில் அமைந்துள்ள குளத்தில் 2 வயது ஆண் குழந்தை ஒருவர் வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் மக்கள் மனதில் பெரும் சோகத்தையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, இன்று (16) காலை, அப்பகுதி மக்கள் ஒன்று கூடி, குறித்த குளத்தின் சுற்றுப்புறத்தில் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் எனக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்று (15) இரவு குழந்தை குளத்தில் தவறி வீழ்ந்த நிலையில் மீட்கப்பட்டு, உடனடியாக அக்கரைப்பற்று மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அவசர சிகிச்சைக்குப் பிறகும் உயிர் காப்பாற்ற முடியவில்லை.
மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் விதமாக, இன்று உயிரிழந்த அந்தக் குழந்தையின் பிறந்த நாளாக அமைந்துள்ளது.
அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர்கள் ஏ.எல். தவம் மற்றும் அஸ்மத் ஆகியோரின் ஒத்துழைப்புடன் மரணித்த குழந்தையின் ஜனாஸா வைத்தியசாலையின் ஒழுங்குமுறைகளுக்கமைவாக பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதே நேரத்தில், இதற்கு முன் இரு சிறுவர்கள் அதே குளத்தில் உயிரிழந்துள்ளதாகவும், அந்த குளம் உயிருக்கு ஆபத்தான இடமாக உள்ளதாகவும் பாதுகாப்பு கட்டுமானம் ஒன்றை உடனடியாக அமுல்படுத்த வேண்டும் என்றே அவர்கள் வலியுறுத்தினர்.
மக்களின் கோரிக்கைக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.