ஒருகாலத்தில், ஒரு குடும்பத்தில் ஒரே சோப்பை அனைவரும் பகிர்ந்து பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக இருந்தது. அது பெரிதாகக் கவனிக்கப்படவோ, சிந்திக்கப்படவோ செய்யவில்லை. ஆனால் காலம் மாறியுள்ளது. இன்று மக்கள் சுகாதாரத்திலும் தனிப்பட்ட பராமரிப்பிலும் அதிக விழிப்புணர்வுடன் இருக்கின்றனர். அதன் விளைவாக, ஒவ்வொருவரும் தங்கள் சருமத் தேவைகளுக்கேற்ப தனித்தனி சோப்புகளைத் தேர்வு செய்து பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்கள் — இது ஒரு நல்ல முன்னேற்றம்.
ஒரே வீட்டில் பலவிதமான சரும அமைப்புகள் கொண்டவர்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில் ஒரே சோப்பை பலர் பகிர்ந்து பயன்படுத்துவது, குறிப்பாக சரும சிக்கல்கள் உள்ளவர்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. பொதுவாக, சோப்பின் மீது நீர் நின்று விட்டால் அல்லது நன்கு கழுவாமல் வைக்கப்பட்டால், அதன் மேற்பரப்பில் பாக்டீரியா, வைரஸ், பாக்ஸ் மற்றும் பிற நுண்ணுயிரிகள் சேர வாய்ப்பு உண்டு. இதனால், ஒருவரின் நோய் இன்னொருவருக்குப் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
இது எல்லாம் தவிர்க்க, ஒவ்வொருவரும் தனிப்பட்ட சோப்பைப் பயன்படுத்துவதே சிறந்தது. ஒரே சோப்பைப் பகிர வேண்டிய சூழ்நிலையில், அது நன்கு கழுவப்பட்டு, உலர வைக்கப்பட்டிருக்க வேண்டும். கணவன்-மனைவி என்றாலும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது முக்கியம்.
இன்றைய சூழலில் ‘லிக்யுட் சோப்’ எனும் திரவ சோப்புகள் பிரபலமடைந்துள்ளன. இந்த பாட்டில் வடிவ சோப்புகள் நேரடி தொடர்பின்றி பயன்படுத்தப்படுவதால், தொற்று பரவ வாய்ப்பே இல்லை எனலாம்.
சோப்பைப் பயன்படுத்துவதின் நோக்கம், உடலை சுத்தமாக வைத்தல், அழுக்குகளை நீக்குதல், புத்துணர்ச்சி பெறுதல். எனவே பயன்படுத்தும் சோப்பின் தரம் மிகவும் முக்கியமானது. குளியல் என்பது ஒரு புது சக்தியை வழங்கும் செயலாக இருக்க வேண்டும். வெறும் சோப்பை தேய்த்து, நீரை ஊற்றிக் கொண்டு பாத்ரூமில் இருந்து விரைந்து வெளியேறுவது மாதிரியானது அல்ல.
நேரம் எடுத்து நீரை ஊற்றி , தரமான சோப்புடன், சரியான முறையில் குளித்தால், அது சுத்தம் மட்டுமின்றி ஒரு மனநிறைவு தரும் அனுபவமாகவும் மாறும்.