மாணவிகளிடையே கர்ப்பம் தரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர், பாடசாலை மாணவிகளின் கர்ப்ப வீதம் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலைமை குறித்து ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். பாடசாலை கல்வியை தொடர்ந்து பெற்று வரும் நிலையில் தாயாகும் சிறுமிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் சிந்தனைக்கு இடமளிக்கிறது என அவர் குறிப்பிட்டார்.
இவ்வேலைக்கு தீர்வாக, கல்வி அமைச்சுடன் இணைந்து, இளம் பருவப் பெண்கள் மற்றும் மாணவர்களுக்கு பாலியல் கல்வி மற்றும் விழிப்புணர்வை மேம்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது அவர்களுக்கு சரியான அறிவையும் பாதுகாப்பான எதிர்காலத்தையும் உருவாக்க உதவும் என்ற நம்பிக்கையையும் அமைச்சர் தெரிவித்தார்.
அரசாங்கம், இந்நிலைமையை மாற்ற எடுத்து வரும் நடவடிக்கைகள் திட்டமிட்ட மற்றும் நிலையான வகையில் அமையும் என்றும் அவர் உறுதியளித்தார்.