அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா (ACJU) நாட்டின் முஸ்லிம் சமூகத்தின் சமய மற்றும் சமூக உரிமைகளை பாதுகாப்பதற்காக அதன் தோற்றத்திலிருந்தே அர்ப்பணத்துடன் செயற்பட்டு வருகிறது. இந்நிறுவனம், முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் அரசாங்கத்துடன் இணைந்து பல வாய்ப்புகளில் பணியாற்றியுள்ளதையும், அதனை மதிப்புடன் பதிவு செய்ய வேண்டியது மிக முக்கியமானது.
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா , மார்க்கத்துக்கு முரணாக அமையக்கூடிய சட்ட மாற்றங்களை தவிர்த்து, மதக் கொள்கைக்கு ஏற்ற வகையில் மாற்று முன்மொழிவுகளை வழங்கி வந்துள்ளது. இத்தகைய பரிந்துரைகள் பலவேறுபட்ட நிலைகளில் அரசாங்கத்துக்குத் தக்க ஆலோசனைகளாக அமைந்துள்ளன.
அந்த நிலையில், முன்னாள் அமைச்சர் அலி சப்ரி அண்மையில் ஊடகமொன்றில் வழங்கிய “முஸ்லிம் திருமண சட்ட திருத்தத்திற்கு ஜம்இய்யா தடையாக உள்ளது” என்ற குற்றச்சாட்டை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கடுமையாக கண்டிக்கிறது. அந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் துல்லியமற்றது, அடிப்படையற்றது என்றும் தெரிவித்துள்ளது.
இதன்காரணமாக, முஸ்லிம் திருமண மற்றும் விவாகரத்துச் சட்டத்தில் ஜம்இய்யாவின் நிலைப்பாடு குறித்து விரைவில் முழுமையான விளக்க அறிக்கை ஒன்றை பொது மக்களுக்காக வெளியிட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.