அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கன்னி அமர்வில், ஜூம்ஆ பள்ளி வட்டார உறுப்பினர் கௌரவ ஏ.எல். பாயிஸ், தனது ஊரின் அவசியங்களையும் மக்களின் துன்பங்களையும் உணர்த்தும் வகையில் தனது உரையை ஆளுமையுடன் நிகழ்த்தினார்.
தனது உரையின் தொடக்கத்தில், அட்டாளைச்சேனையின் இயற்கை வளங்களையும், நெய்தல் மற்றும் மருத நிலங்களின் சிறப்பையும் எடுத்துரைத்த அவர், கோணாவத்தை, கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி, தென்கிழக்கு பல்கலைக்கழகம் என, அறிவியல் மற்றும் கல்வி வளங்களைக் கொண்ட மேன்மையான மண்ணில் மக்கள் வாழ்வதை பெருமையுடன் சுட்டிக்காட்டினார்.
அட்டாளைச்சேனை, பாலமுனை, திராய்க்கேனி, ஒலுவில், தீகவாபி உள்ளிட்ட கிராமங்களை உள்ளடக்கிய இந்த பிரதேச சபை எல்லையில், பல்வேறு காலங்களில் வெள்ள அனர்த்தங்கள் ஏற்படுகின்றன. இந்நிலையில், வெள்ளநீர் வழிந்தோடும் நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்படும் இயந்திர சாதனமாக, தற்போது சபையில் ஒரே ஒரு JCB வாகனம் மட்டுமே உள்ளதாக தெரிவித்த அவர்,
“கழிவுகளை அகற்றுவதற்கே அந்த வாகனம் பயன்படுகிறது. திடீர் வெள்ளத்தின் போது மக்களின் பாதிப்பு அதிகரிக்கின்றது. எனவே, மக்கள் நலன் கருதி மேலும் ஒரு JCB வாகனம் உடனடியாக கொள்வனவு செய்யப்பட வேண்டும்,”
என வலியுறுத்தினார்.
மேலும், கிழக்கு மாகாணத்தில் 400 மீட்டர் நீளமுள்ள அழகிய விளையாட்டு மைதானத்தைக் கொண்ட பிரதேசமாக எமதூர் இருந்தாலும், அந்த மைதானத்தில் ஒரு மலசலகூட வசதியும் இல்லாத நிலை மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். இது தொடர்பாக உரிய நிதியை ஒதுக்குமாறு கோரியதன் அடிப்படையில், மலசலகூடம் அமைப்பதற்காக ரூ. 3 மில்லியன் நிதி உடனடியாக ஒதுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது உரை, மக்கள் நலனுக்காக உறுதியான குரலாக ஒலித்தது. அரசியல் பேசாமல், செயற்பாடுகளை முன்னிறுத்தும் உறுதியையும் இந்த உரை பிரதிபலித்தது.