மஹர சிறைச்சாலை வளவிலுள்ள பள்ளிவாசலுக்கு வெளியாட்கள் வருவதனால் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படுகிறது, அந்த பள்ளிவாசலை மீண்டும் திறக்க அனுமதி வழங்கப்படாது என நீதி, சிறைச்சாலைகள் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற வாய் மூல விடைக்கான வினா நேரத்தில், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் எம்.பி.யான மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
“மஹர சிறை வளவிலுள்ள பள்ளிவாசலுக்குள், சட்டவிரோத பாதைகள் வழியாக வெளியாட்கள் உள்ளே நுழைந்துள்ளனர். அந்த நேரங்களில், கைதிகளுக்கு செல்போன்கள், போதைப்பொருட்கள் போன்றவை வீசப்பட்டுள்ளன. அதே நேரத்தில், இஸ்லாமியரின் இறப்புகள் அல்லது விவாக விழாக்கள் போன்ற சமயங்களில் கூட, பலர் பள்ளிவாசலுக்கு வந்தனர். இது சிறை அதிகாரிகளுக்கும், கைதிகளின் பாதுகாப்புக்கும் பெரும் ஆபத்தாக மாறியது.
இந்த சூழ்நிலையை முன்னிட்டு, அப்போதைய சிறைச்சாலை அத்தியட்சகர் அந்த பள்ளிவாசலை மூட தீர்மானித்தார். தற்போது, அதை மீண்டும் திறக்கும்போது அந்தச்சிக்கல்கள் மீண்டும் ஏற்பட வாய்ப்பு அதிகம். எனவே அந்த பள்ளிவாசல் மீண்டும் திறக்கப்படமுடியாது.
எனினும், சிறைச்சாலைக்கு சொந்தமான ஐந்து பேர்ச்சஸ் காணி அந்த இடத்தில் உள்ளதால், தேவையானால் பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத வகையில் அந்தக் காணியை வழங்க நடவடிக்கை எடுக்க அரசு தயாராக உள்ளது,” என்றார்.