மழைக்காலங்களில் பொத்துவில் பிரதேசத்தில் ஏற்படும் வெள்ள அனர்த்தங்களை கட்டுப்படுத்தும் நோக்கில், அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் அதிகாரிகள் கடந்த ஜூலை 21ஆம் திகதி அந்தப் பிரதேசத்திற்கு நேரில் விஜயம் செய்தனர். இந்த நடவடிக்கை, அமைச்சிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோள்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டது.
பொத்துவில் P/15 களப்புக்கட்டு பிரதேசத்தில் உள்ள கால்வாய்கள் மற்றும் வெள்ள நீர் ஓட்டங்களின் மீள்பார்வையை மேற்கொண்ட அதிகாரிகள், முன்மொழியப்பட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் பகுதிகளை கௌரவ தவிசாளர் எஸ்.எம்.எம். முஷாரப்பின் தலைமையில் நேரில் பார்வையிட்டனர்.
இந்த திட்டங்களுக்காக அரசாங்கத்தால் சுமார் ரூ.10 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், வெள்ளம் காரணமாக பெரிதும் பாதிக்கப்படும் கொட்டுகள் பிரதேசத்தில், மழைநீர் கடலுக்குள் செல்லும் வகையில் புதிய வடிகால் அமைக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. இதற்கான வேலைகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.