அட்டாளைச்சேனை பிரதேச சபையின் புதிய (கன்னி) அமர்வின் போது, அல் முனீரா வட்டார உறுப்பினர் கௌரவ றியா மசூர், தனது வட்டாரத்திற்கு கடந்த நிர்வாகத்தினால் எந்தவிதமான நிதியும் ஒதுக்கப்படவில்லை என்பதைக் சுட்டிக் காட்டி முக்கியமான பிரச்சினையை வெளிக்கொணர்ந்தார்.
அவர் கூறுகையில், கடந்த மூன்று வருட இடைவேளையின் போது அதாவது, பிரதேச சபை கலைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் முன்னாள் நிர்வாகம் முன்வைத்த திட்டங்களில் அல் முனீரா வட்டாரம் முற்றாக புறக்கணிக்கப்பட்டதாக அவர் முறைப்பாடு தெரிவித்தார். “எந்தவிதமான நிதி திட்டங்களும் எங்கள் வட்டாரத்திற்குத் திட்டமிடப்படவில்லை. இதன் காரணமாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நலன்கள் வழங்கப்படவில்லை,” என அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கான தெளிவான காரணத்தை, கடந்த நிர்வாக செயலாளரும் தற்போது பணியில் உள்ள செயலாளரும் பொதுமக்கள் முன் விளக்க வேண்டும் எனவும், இதற்குப் பக்கபலமாக செயல்பட்டுள்ள அனைவரும் பதிலளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
“எமது வட்டார மக்களின் உரிமைகளை மீறாத வகையில், இனிமேலும் எங்களை புறக்கணிக்காமல், நிதி திட்டங்களை எங்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்,” என்றார் உறுப்பினர் றியா மசூர்.
இவ்வாறான வலியுறுத்தல், புதிய நிர்வாகத்தின் ஊடாக வட்டார அபிவிருத்திக்கு புதிய வழி திறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.