Top News
| அட்டாளைச்சேனை நூலகங்களுக்கு கெளரவ உறுப்பினர் ஐ.ஏ.ஸிறாஜ் தனது சொந்த நிதியிலிருந்து புதிய நூல்கள் கையளிப்பு | | அல்–ஹிதாயா மகளிர் கல்லூரிக்கு தேசிய ரீதியில் கிடைத்த இரட்டை வெற்றியினால் பாலமுனை மண்ணை பெருமைப்படுத்திய இரண்டு சகோதரிகள்! | | கோடீஸ்வரன் எம்பி கல்முனை பிரதேச செயலகப் பிரிவுகளை அரசியல் கருவியாக பயன்படுத்தும் பழக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் – உதுமாலெப்பை எம்பி வலியுறுத்தல் |
Nov 22, 2025

யானை-மனித மோதல்களை சமாளிக்க மாவட்ட குழுக் கூட்டத்தில் பல பரிந்துரைகளை கூறிய பிரதித் தவிசாளர் பாறுக் நஜித்

Posted on July 24, 2025 by Admin | 221 Views

அம்பாறை மாவட்டத்தில் அதிகரித்து வரும் மனித-யானை மோதல்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், கடந்த 23ஆம் திகதி மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர் மட்ட ஆலோசனைக் கூட்டத்தில், மனித-யானை மோதல் நிர்வாக குழு ஒன்றை அமைக்கும் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்ரம தலைமையில் நடைபெற்ற இக்கூட்டம், ஏ.ஐ. விக்ரம மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இதில் பல மாவட்ட அதிகாரிகள், உள்ளூராட்சி சபைத் தலைவர்கள், வனவிலங்கு துறையினர் மற்றும் பாதுகாப்புப் பிரிவினர் பங்கேற்றனர்.

மனித-யானை மோதல்களுக்கு முக்கிய காரணமாக, திட்டமிடாத அபிவிருத்தி நடவடிக்கைகள், யானைகள் பழக்கப்பட்ட இயற்கை வழித்தடங்களை இழக்கச் செய்தமை குறிப்பிடப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் மட்டுமே, மாவட்டத்தில் ரூ.89 மில்லியன் நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.

நிகழ்வின் போது, அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, நிந்தவூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான யானை-மனித மோதல்கள் குறித்து பிரதிநிதிகள் பேசினர். குறிப்பாக, Bio-fence Barrier மற்றும் Lemon-Palmira நடவு மூலம் உயிர்வாழ்வு மேம்பாட்டு திட்டம் ஆகிய பரிந்துரைகள் அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் M.பாறுக் நஜித் அவர்களால் முன்வைக்கப்பட்டு, அதிகாரிகளால் பெரிதும் வரவேற்கப்பட்டது.

இக்குழு, அறிவியல் அடிப்படையிலான தீர்வுகள், திறமையான செயல்பாடுகள் மற்றும் பன்முகப்பணிக்குழு அணுகுமுறைகள் மூலம், யானைகளையும், மனித உயிர்களையும், விவசாயங்களையும் பாதுகாக்க செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

நிகழ்வில், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் M.A. ராசிக், நிந்தவூர் தவிசாளர் A.அஸ்பர் JP, இறக்காமம் தவிசாளர் M.I. முஸ்மி, அட்டாளைச்சேனை பிரதித் தவிசாளர் M.பாறுக் நஜித் மற்றும் பல முக்கிய உள்ளூராட்சி தலைவர் மற்றும் பிரதித் தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம், பொலிஸ், இராணுவம், சிவில் பாதுகாப்புப் படையினர் உட்பட, ஏராளமான அரச மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.