வாடிக்கையாளர்கள் தங்களது டெபிட் (Debit) அல்லது கிரெடிட் (Credit) கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் போது, சில வியாபாரிகள் 2.5% வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கின்றனர் என்ற முறைப்பாடுகள் அதிகரித்துள்ளன. இதனையடுத்து, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இவ்வகை அறவீடு முறைகள் சட்டவிரோதமானவை எனத் தெரிவித்துள்ளது.
வங்கிகளுடன் வியாபாரிகள் கைச்சாத்திடும் ஒப்பந்தங்களில், வாடிக்கையாளர்களிடம் எவ்வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கக்கூடாது என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி விளக்கியுள்ளது.
“ஒரு வியாபாரி, பட்டியல் விலையைவிட அதிகமாக பணம் கோரினால், வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டு வழங்கிய வங்கிக்கு உடனடியாக முறைப்பாடு தெரிவிக்கலாம்,” என மத்திய வங்கி வலியுறுத்தியுள்ளது.
சில கடைகள், உணவகம் மற்றும் சேவை நிலையங்களில் இந்த விதிமுறைகள் மீறப்படுவதாக வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கொடுத்துவரும் சூழ்நிலையில், மத்திய வங்கியின் இந்த அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.