அட்டாளைச்சேனை கோணாவத்தைப் பகுதியில் நீண்ட காலமாக தேவைப்பட்டிருந்த பொதுமைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் தீவிரமாகும் நிலையில், மாக்ஸ்மென் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாக குழுவினர் கடந்த 23ஆம் திகதி முக்கிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இக்கலந்துரையாடல், அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் கௌரவ ஏ.எஸ்.எம். உவைஸ் மற்றும் செயலாளர் எல்.எம். இர்பான் ஆகியோருடன் இடம்பெற்றது. இதில், அட்டாளைச்சேனை கோணாவத்தை பகுதியில் பொதுமைதானம் ஒன்றின் அவசியம், அது இளைஞர்களுக்கு வழங்கும் பயன்கள் மற்றும் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கௌரவ தவிசாளர் உவைஸ், இளைஞர்களின் எதிர்கால வளர்ச்சிக்காக இம்மைதானம் இன்றியமையாதது எனக் கூறி, தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயார் என்று உறுதியைத் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் பொது மைதானத்தினை அமைப்பதற்கான அனுமதியானது கடந்த காலத்தில் அட்டாளைச்சேனை பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் முயற்சியினால் பெற்றுக்கொடுக்கப்பட்டதென்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் நிறைவில், மாக்ஸ்மென் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள், தவிசாளர் உவைஸ் அவர்களுக்கு வாழ்த்துச்சின்னம் வழங்கி கௌரவித்து நன்றியினைத் தெரிவித்தனர்.