பெண்கள் மதுபான உரிமைகள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை இலங்கை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெண் ஆர்வலர்கள் மற்றும் மகளிர் அமைப்புகளால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கு, பெண்கள் மதுபான விற்பனை நிலையங்களில் மதுபானம் வாங்குவதையும், அந்த நிறுவனங்களில் வேலை செய்யவதையும், தேவையெனில் சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானம் அருந்துவதையும் சட்டபூர்வமாக அனுமதிக்கும் வகையில் அரசாங்கம் வெளியிட்ட புதிய வர்த்தமானிக்கு அமைவாக இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், அரசாங்கம் முன்னைய வர்த்தமானியை திருத்தி, பெண்களுக்கு சம உரிமைகளை வழங்கும் புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டதைத் தொடர்ந்து, மனுதாரர்கள் தங்கள் மனுவை தொடர விருப்பமில்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதையடுத்து, நீதியரசர்கள் எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர அடங்கிய மூன்று நீதியரசர்களை உள்ளடக்கிய அமர்வு, மனுவை தள்ளுபடி செய்ய தீர்மானித்தது.
2018 ஜூலை 9ஆம் திகதி, இந்த வழக்குக்கான விசாரணையை மேற்கொள்ள உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்படி, பெண்கள் மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் இடங்களில் கடமையாற்றுவதில் இருந்த தடைகளை நீக்க வேண்டும் என இந்த மனு கூறியது.
இப்போது, புதிய வர்த்தமானியின் மூலம் அந்த தடைகள் நீக்கப்பட்டுள்ளன