(அபூ உமர்)
பொத்துவில் மற்றும் உகன பிரதேசங்களுக்கு தனித்தனி கல்வி வலயங்களை அமைக்கும் கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அம்பாறை மாவட்டத்தின் பல முக்கிய கல்வி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் 2026ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் உறுதி அளித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (24) சபாநாயகர் தலைமையில் நடைபெற்ற அமர்வின் போது, அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மேற்கண்ட உறுதிப்படையிலான விளக்கத்தை வழங்கினார்.
அம்பாறை மாவட்டத்தில் உகன, பொத்துவில் பிரதேசங்களுக்கான தனித் தனிக் கல்வி வலயங்களை நிறுவுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதோடு இக் கல்வி வலயங்களுக்கான சிபாரிசினை கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கியும் இதுவரையும் கல்வி அமைச்சு இதற்கான அங்கீகாரத்தை வழங்காமல் உள்ளது. எனவே கல்வி அமைச்சு பொத்துவில்,உகன கல்வி வலயங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதா? என்பதனையும், அவ்வாறு நடவடிக்கைகள் கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டிருந்தால் அதன் விபரங்களையும் கௌரவ பிரதமர் அவர்கள் பாராளுமன்றத்திற்கு தெரிவிப்பாரா ? என்ற கேள்வியை அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தனது கேள்விகளாக கேட்டார்.
இதற்கு பதிலளித்த பிரதமர் அவர்கள் …
பொத்துவில்,உகன பிரதேசங்களுக்கான புதிய கல்வி வலயம் சம்மந்தமாக கிழக்கு மாகாண ஆளுநரின் சிபாரிசு கடிதம் இதுவரை கிடைக்கவில்லை எனவும் கிழக்கு மாகாண ஆளுநரின் சிபாரிசு கடிதம் கிடைத்தவுடன் உகன , பொத்துவில் பிரதேசங்களுக்கான தனிக்கல்வி வலயங்கள் அமைப்பது தொடர்பான கோரிக்கைக்கு முன்னுரிமை வழங்குவதுடன், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம், அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கலாசாலை ,அம்பாறை , சம்மாந்துறை, அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரிகளுக்கும் 2026ம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என பிரதமர் பதிலளித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பிரதமரிடம் தனது இரண்டாவது கேள்வியாக,
பொத்துவில்,உகன கல்வி வலயங்கள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்தன. இக்கல்வி வலயங்களை அமைப்பதாகக் கூறி கடந்த கால அரசாங்கம் அம்பாறை மாவட்ட மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றி வந்துள்ளது . இது தொடர்பாக தாங்கள் கல்வி அமைச்சராக பதவியேற்ற போது இப்பிரச்சினையை தீர்த்து தருமாறு நான் வேண்டுகோள் விடுத்திருந்தேன். உங்களுடைய தலைமையில் அண்மையில் நடைபெற்ற கல்வி, உயர் கல்வி அமைச்சின் ஆலோசனைக்கூட்டத்தில் பொத்துவில்,உகன கல்வி வலயங்கள் தொடர்பாக கலந்துரையாடிய போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாணத்தில் உகன, பொத்துவில் பிரதேசங்களுக்கான தனித்தனி கல்வி வலயங்கள் அமைப்பதற்கான சிபாரிசுகளை கிழக்கு மாகாண கல்வி அமைச்சும், கிழக்கு மாகாண ஆளுநரும் சிபாரிசு செய்து மத்திய கல்வி அமைச்சுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்கள்.
நமது நாட்டின் இரண்டாவது தலைவரான தாங்கள் கல்வி அமைச்சராக பதவியேற்று கல்வி மறுசீரமைப்பு உட்பட பல நல்ல விடயங்களை மேற் கொண்டு வருகின்றீர்கள். அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் உங்களுடைய நல்ல செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்.
கடந்த பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் உங்களுடைய தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு ஒருபோதும் இல்லாதவாறு 145000 வாக்குகள் கிடைத்ததுடன் அம்பாறை மாவட்டத்தில் 4 பாராளுமன்ற உறுப்பினர்களையும் உங்கள் தேசிய மக்கள் சக்தி பெற்றது.
கடந்த அரசாங்கம் எமது அம்பாறை மாவட்ட மக்களை ஏமாற்றியதனால் தான் உங்களின் கட்சிக்கு 4 பாராளுமன்ற உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்தில் கிடைத்தனர்.
எனவே அம்பாறை மாவட்ட மக்களின் நீதியான விடயங்களுக்கு நீங்கள் தீர்வுகளை தர வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு அம்பாறை மாவட்டத்தில் உங்களின் அமைச்சின் கீழ் நிர்வகிக்கப்படும் ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் நமது நாட்டின் தேசிய பல்கலைக்கழகமாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது . இங்கு மூவின சமூகங்களையும் சேர்ந்த மாணவர்கள் கல்வியை பெறுகின்றனர். தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கான வைத்திய பீடம் நீண்ட காலமாக உருவாக்கப்படாமல் உள்ளது ஆகவே அதனை உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை பிரதம மந்திரி அவர்கள் மேற்கொள்வதுடன் அதற்கான அபிவிருத்திப் பணிகளும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றார்.
மேலும் அவர் உரையாற்றுகையில்,
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியல் கல்லூரி, அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை ஆகிய இரண்டு நிறுவனங்களும் நான் பிறந்த எனது சொந்த ஊரான அட்டாளைச்சேனையில் அமைந்துள்ளது என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
அம்பாறை, சம்மாந்துறை, அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரிகளையும் உங்களது அடுத்த வருட வரவு செலவு திட்டங்களில் உள்ளடக்கி அவற்றின் அபிவிருத்திக்கான நிதியை ஒதுக்குவீர்களா? என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை பிரதம மந்திரி அவர்களிடம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார் .
பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பையின் 2வது கேள்விக்கு பதிலளித்த பிரதம மந்திரி அவர்கள் அம்பாறை மாவட்டத்தில் உகன, பொத்துவில் பிரதேசங்களுக்கான தனித்தனி கல்வி வலயங்கள் உருவாக்குவது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநரின் சிபாரிசு கடிதம் கிடைத்தவுடன் இது தொடர்பான செயற்பாடுகள் கல்வியமைச்சினால் முன்னெடுக்கப்படும் எனவும் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகம், தேசிய கல்வியியல் கல்லூரி, அரசினர் ஆசிரியர் பயிற்சிக்கலாசாலை, தொழில்நுட்ப கல்லூரிகளுக்கான நிதி ஒதுக்கீடு 2026ம் வருட வரவு செலவு திட்டத்தில் சேர்த்துக் கொள்வதாகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய பாராளுமன்றத்தில் பதிலளித்தார்.