பிரதமர் ஹரிணி அமரசூரிய பெண்கள் பாடசாலையில் கல்வி கற்றதனால், அவருக்கு பாடசாலைக் காலத்தில் ஆண் நண்பர்கள் இருக்க வாய்ப்பே இல்லையென்று பாராளுமன்றத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
தானும் முற்றிலும் ஆண்கள் மட்டும் பயிலும் பாடசாலையில் படித்ததால், தனது மாணவப் பருவத்தில் பெண் நண்பர்கள் யாரும் இல்லை என்றார். இது தனிப்பட்ட அனுபவம் மட்டும் அல்ல, இலங்கையில் பலர் எதிர்கொள்ளும் சமூக ரீதியிலான ஒரு பிரச்சினை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக செயல்படும் பாடசாலைகள் நடைமுறையில் உள்ளதனால், சமூக உறவுகளில் ஏற்படும் இடைவெளி பல்வேறு பிரச்சினைகளுக்குக் காரணமாகின்றது என்றார் அமைச்சர்.
இந்த நிலையில், எதிர்கால கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஆண்கள், பெண்கள் என தனித்தனியாக இயங்கும் பாடசாலைகள் குறித்து முடிவு எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
இந்த கருத்துக்களை அவர், பாராளுமன்றத்தில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு விவாதத்தின் போது உரையாற்றுகையில் வெளிப்படுத்தினார்.