பொம்மைக்குள் சிக்கலான முறையில் போதைப்பொருள் மறைத்து, சிறுமியை உபயோகித்து கடத்த முயன்ற 29 வயதுடைய பெண் ஒருவர் சீதுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கொட்டாஞ்சேனை பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், தனது 8 வயது மகளுடன் இன்று (26) காலை சீதுவ ராஜபக்ஷபுர பகுதியில் இருந்த விடுதி ஒன்றில் இருந்து செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையும் முப்படையினரும் இணைந்து நடத்திய சோதனை நடவடிக்கையின் போது, குறித்த பெண் ஒரு பொம்மையை குழந்தையடம் கொடுத்து மிகவும் சந்தேகத்திற்கிடமான முறையில் எடுத்துச் சென்றது அதிகாரிகளின் கவனத்திற்கு வந்தது.
பொம்மையை பரிசோதித்தபோது, அதற்குள் ஐஸ், ஹெரோயின், கேரள கஞ்சா ஆகிய போதைப்பொருட்களும், ஒரு மின்னணு தராசுவும் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை பொலிஸார் கண்டுபிடித்தனர்.
மேலும், சந்தேகநபரின் உடலில் பதுக்கி வைத்திருந்த மேலும் சில ஐஸ் பெக்கட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸாரின் தகவலின்படி, சந்தேகநபர் தனது மகளுக்கு பொம்மையைக் கொடுத்து, கொட்டாஞ்சேனையில் இருந்து சீதுவ வரை போதைப்பொருளுடன் பயணம் செய்திருக்கலாம். இப்பொருட்கள் சீதுவ பகுதியில் மறைந்துவைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் கொட்டாஞ்சேனைக்கு கொண்டு சென்று விற்பனை செய்யப்படுவதற்கான திட்டமா என்பதையும் விசாரணைகள் கொண்டு தீர்மானிக்க உள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நீர்கொழும்பு பிரிவின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேனவின் மேற்பார்வையில் இடம்பெற்று வருகின்றன.