யாழ்ப்பாணம் ,வேலணை துறையூர் பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்திய சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 62 வயது கடை உரிமையாளர் ஒருவர், ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (ஜூலை 19) அன்று, துறையூர் கடற்றொழில் சங்கம் அருகிலுள்ள கடையில் ஜூஸ் வாங்கச் சென்ற சிறுமிக்கு, கடை உரிமையாளர் குளிரூட்டிக்குள் சென்று ஜூஸ் எடுக்குமாறு கூறியதாக கூறப்படுகிறது. அந்த நேரத்தில், அவர் சிறுமியை பின்னால் இருந்து கட்டியணைத்து பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, வீடு திரும்பியவுடன் தன் தாயிடம் நடந்ததை பகிர்ந்துள்ளார். ஆனால், சமூக அழுத்தம் மற்றும் அயலவர்களின் விமர்சனத்தை அஞ்சிய தாயார், ஆரம்பத்தில் பொலிஸ் புகார் அளிக்க தயங்கினார்.
பின்னர், சமூக ஆர்வலர்கள் முயற்சியால், சம்பவம் கடந்த நான்கு நாள்களுக்கு பிறகு ஜூலை 23ஆம் திகதி கிராம உத்தியோகத்தரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அடுத்த நாள் (ஜூலை 24) வேலணை பிரதேச செயலகத்தில் உள்ள சிறுவர் நன்னடத்தை அலுவலகத்தில் முறையான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, சம்பவம் குறித்த முறைப்பாடு ஊர்காவற்துறை பொலிஸாரிடம் பதிவு செய்யப்பட்டு, ஜூலை 25ஆம் நாள் பிற்பகலில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.