2026ஆம் ஆண்டு அமுலுக்கு வரும் புதிய கல்வி சீர்திருத்தம், முதற்கட்டமாக 1ஆம் வகுப்பு மற்றும் 6ஆம் வகுப்புகளை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்படும் என பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில் சப்ரகமுவ மாகாண கல்வி அதிகாரிகளுடன் நடந்த விசேட ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர், “சீர்திருத்தம் என்பது அதிகாரம் நிலைநாட்டுவதற்காக அல்ல; இது தேசிய தேவையை பூர்த்தி செய்யும் முயற்சி,” எனக் குறிப்பிட்டார்.
தற்போது காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களுக்கு உகந்த ஆசிரியர் விகிதம், மற்றும் ஆசிரியர் இடமாற்றங்கள் போன்ற முக்கிய பிரச்சினைகள் தொடர்பாக விரைவான தீர்வுகள் தேடுவதற்கு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஆசிரியர் சமநிலைப்படுத்தல், வகுப்பறையில் மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப உரிய ஆசிரியர்களை நிர்வகித்தல் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தப்படும். இது ஒரு ஒழுங்குமுறை மாற்றம், படிப்படியாகவே செயல்படுத்தப்படும்,” என்று அவர் வலியுறுத்தினார்.
இக்கூட்டம், புதிய கல்வி சீர்திருத்த திட்டத்தின் நோக்கங்கள், நடைமுறை அம்சங்கள் மற்றும் நடைமுறையில் எதிர்பார்க்கப்படும் சவால்கள் குறித்து அரசு அதிகாரிகள் மற்றும் கல்வி நிர்வாகிகளுக்கு தெளிவு ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.