இலங்கையின் பாரம்பரியமான விவாகக் கட்டமைப்பை நாசப்படுத்தும் நோக்கில் சில அமைப்புகள் செயற்பட்டு வருவதாக கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் வருத்தம் தெரிவித்துள்ளார்.
பேருவளை புனித அன்னம்மாள் தேவாலயத்தில் நடைபெற்ற வருடாந்த திருவிழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், மேற்கேத்திய நாடுகளில் பரவி வரும் தன்பாலின திருமண கலாசாரம் இலங்கையிலும் ஊடுருவ முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
“அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இளைஞர்கள் உணர்வுகளின் அடிப்படையில் திருமணங்களை செய்கிறார்கள். திருமணத்தின் ஆழமான அர்த்தத்தை புரிந்துகொள்ளாமல், தற்காலிக ஆசைகளுக்கே அடிமையாகிறார்கள். ஆண் ஆணுடன், பெண் பெண்ணுடன் திருமணம் செய்யும் கலாசாரம் இப்போது மேலோங்கியிருக்கிறது,” என்று அவர் கவலை வெளியிட்டார்.
இவ்வாறு, அந்நிய கலாசாரத்தை இலங்கைக்கும் கொண்டு வர சில அமைப்புகள் முயற்சி செய்கின்றன. இதனை “மனித உரிமை” என சிலர் விவரிக்க முயற்சி செய்கின்றபோதும், அவை குடும்பத்தின் இயல்பு மற்றும் பாரம்பரிய திருமணக் கொள்கைக்கு முரணாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தினார்.
“ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் திருமண அமைப்பே இயற்கையானது. அதனை மாற்றும் எந்த செயலும் சமூகத்தின் அடித்தளத்தை பாதிக்கும்,” என்றார் பேராயர்.
தற்போது இலங்கையிலும் இப்படியான கலாசாரங்கள் ‘துளிர்விடத்’ துவங்கியிருப்பது வருத்தத்திற்குரியதாக அவர் தெரிவித்தார்.