இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு பீடிக்கும் விதிக்கப்படும் புகையிலை வரி, ரூ. 2ல் இருந்து ரூ. 3 ஆக உயர்த்த அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியுள்ளது. இந்த உயர்வு 2025 ஏப்ரல் 1ஆம் திகதியிடப்பட்ட 2430/16 என்ற அதிவிசேட வர்த்தமானிக்கு அரசாங்க நிதி பற்றிய குழு அனுமதி வழங்கியது.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா தலைமையில் கடந்த 22ம் திகதி இடம்பெற்ற நிதிக்குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது, 1999ஆம் ஆண்டின் 8ம் இலக்க புகையிலை வரிச்சட்டத்தின் பிரிவு 2ன் கீழ் நிதி அமைச்சரால் வெளியிடப்பட்ட கட்டளைக்கு அமைவாக நடைமுறைப்படுத்தப்பட்டது. 2025ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் போது இதன் முக்கியத்துவம் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது.
2024ஆம் ஆண்டில் பீடி உற்பத்திக்காக 1140 அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டன. எனினும், வரி அதிகரிப்புக்குப் பிறகு, அதில் 840 பத்திரங்களே புதுப்பிக்கப்பட்டன. இதன் காரணமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருமானம் எதிர்பார்த்த அளவுக்கு வரவில்லை என மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
அரசாங்கம் கடந்த ஆண்டு ரூ. 2 பில்லியன் வருமானம் எதிர்பார்த்த நிலையில், ரூ. 1.055 பில்லியன்தான் பெற முடிந்தது. இந்த ஆண்டு இதுவரை ரூ. 469 மில்லியன்தான் வருமானமாகியுள்ளதாகவும், வருமானக் குறைவுக்கு முக்கிய காரணமாக பீடிகள் அதிக அளவில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதைவும், இதற்கு எதிரான நடவடிக்கைகள் போதிய முறையில் எடுக்கப்படவில்லையெனவும் அவர் சுட்டிக்காட்டினார்.