யாழ்ப்பாணம் சாவகச்சேரியில், தனது TikTok காதலனுக்காக மோட்டார் சைக்கிள் வாங்க வேண்டும் என்பதற்காக உறவினர் வீட்டிலிருந்து நகைகள் திருடிய 23 வயதுடைய யுவதி உட்பட ஏழு பேர் நேற்று (28) மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாட்டில் வசித்து வரும் ஒரு குடும்ப பெண், விடுமுறைக்காக தாயகம் திரும்பியிருந்த நிலையில், தன்னுடன் நெருங்கிய உறவினராக இருந்த யுவதியுடன் தற்காலிகமாக ஒன்றாக வசித்து வந்துள்ளார். சில தினங்களாக தனது நகைகள் காணாமல் போவதை உணர்ந்தவுடன் சந்தேகத்தின் பேரில் யுவதியை வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார்.
அதற்குப் பிறகு, தனது உடமைகளை எடுத்துச் செல்ல மீண்டும் வீட்டுக்கு வந்த யுவதி, வீட்டில் இருக்கும்போது அந்த பெண் குளியலறைக்கு சென்றிருக்கும் போது அவரது தாலிக்கொடி காணாமல் போனது மட்டுமன்றி, யுவதியும் வீட்டில் இருந்து மறைந்திருந்தார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
விசாரணையில், TikTok வழியாக பிரபலமான இளைஞர் ஒருவரை காதலித்த அந்த யுவதி, அவருக்காக சுமார் 19 பவுண் தங்க நகைகளை திருடி கொடுத்ததாக வாக்குமூலம் வழங்கியுள்ளார். மோட்டார் சைக்கிள் வாங்கவும், காதலனின் ஆடம்பர வாழ்க்கைக்காகவும் அந்த நகைகளை கொடுத்ததாக கூறியுள்ளார்.
வாக்குமூலத்தின் அடிப்படையில், பொலிஸார் அந்த TikTok இளைஞர் மற்றும் மற்ற தொடர்புடையவர்களை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் பட்டியலில், அந்த இளைஞரின் இரு காதலிகள், நகை விற்பனையில் உதவியவர்கள், மற்றும் அவரது சித்தப்பா மற்றும் சித்தி உள்ளடங்குவர்.
கைது செய்யப்பட்ட 7 பேரும் தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.