திறனும், அனுபவமும் கொண்ட சாய்ந்தமருதைச் சேர்ந்த பொறியியலாளர் எம்.எம்.எம். முனாஸ், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் பதில் பிரதி மாகாணப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பிலுள்ள மாகாண வீதி அபிவிருத்தி திணைக்கள அலுவலகத்தில் கடந்த புதன்கிழமை (30) தனது புதிய பொறுப்புகளைப் பொறியியலாளர் முனாஸ் அதிகாரப்பூர்வமாக ஏற்கினார்.
முனாஸ் கடந்த 16 ஆண்டுகளாக வவுனியா, முல்லைத்தீவு, அம்பாறை மற்றும் கல்முனை போன்ற பகுதிகளில் வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் நிறைவேற்றுப் பொறியியலாளராக கடமையாற்றிய அனுபவமிக்க நிபுணராவார்.
மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் பொறியியல் துறையில் பட்டம் பெற்று, அதனைத் தொடர்ந்தும் டோக்யோ, ஜப்பானில் வீதி நிர்வாகம் தொடர்பான கற்கை நெறியை முடித்துள்ள இவர், முன்னதாக கட்டாரின் டோஹா நகரில் அமெரிக்க விமானத் தளத்தில் சிவில் பொறியியலாளராக பணியாற்றியுள்ளார்.
வெளிநாட்டு அனுபவத்தைக் கொண்டு நாட்டுக்கே பயன்பட வேண்டும் என்ற ஆவலுடன் அரச சேவையில் இணைந்த முனாஸ், இளம் வயதிலேயே உயர்ந்த பதவிக்கு நியமிக்கப்படுவது அவரது தொழில் நேர்மை, அர்ப்பணிப்பு மற்றும் சமூகப் பங்களிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.
சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் செயலாளராகவும் பணியாற்றும் இவர், சமூகத்தினரிடையே ஒரு மெச்சப்படும் சேவையாளர் என மதிக்கப்படுகிறார்.
இவ்வாறு, அவரின் நியமனம் ஊரின் பெருமையைக் கூட்டும் ஒரு முக்கியமான சாதனையாகக் கருதப்படுகிறது.