(அபூ உமர்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள சம்புக்களப்பு – தில்லையாறு பிரதான வாய்க்கால் புனரமைப்புத் திட்டத்திற்கு உலக வங்கி திட்டத்தின் கீழ் 30 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டிருந்தாலும் இரண்டு ஆண்டுகள் கடந்தும் இதுவரை இத்திட்டம் தொடங்கப்படாமை பெரும் கவலைக்கிடமானது என பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.
அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று பகுதிகளில் ஆயிரக்கணக்கான விவசாயக்காணிகள் இந்த வாய்க்கால் புனரமைப்பு தாமதமடைவதால் வெள்ளப்பெருக்குகளால் பாதிக்கப்படும் நிலை காணப்படுகிறது. இது தொடர்பான கோரிக்கைகள் இதற்கு முன்னர் இரண்டு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் தன்னால் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இத் திட்டத்தை ஆரம்பிப்பதில் தொடர்ந்த தாமதிப்பது நீர்ப்பாசனத் திணைக்களத்தின் அலட்சியத்தைக் காட்டுகிறது எனவும் அவர் சாடினார்.
இது தொடர்பாக நேற்று (31.07.2025) கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் பிரதி அமைச்சர் வசந்த பியதிஸ்ஸ ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய உதுமாலெப்பை எம்.பி ,
இத்திட்டம் தாமதமடைவதற்கான காரணங்களை நீர்ப்பாசன பொறியியலாளர் விளக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த அம்பாறை மாவட்ட நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் திரு. எச்.பி.பி. பண்டார, சம்பந்தப்பட்ட புனரமைப்புத் திட்டம் மிக விரைவில் ஆரம்பிக்கப்படும் என உறுதியளித்தார்.